சென்னை--கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ., இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கடும் சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் என, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
கர்நாடக சட்டசபைக்கு, வரும் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில், தேர்தல் நடக்கவுள்ளது. தென் மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி நடக்கும் மாநிலம், கர்நாடகா மட்டுமே.
பல மாநிலங்களில் செல்வாக்கை இழந்து வரும் காங்கிரசுக்கு, கர்நாடகாவில் வலுவான ஓட்டு வங்கி உள்ளது.
இதனால், கர்நாடக சட்டசபை தேர்தலில் வெல்ல, ஓராண்டாகவே காங்கிரஸ் தீவிரமாக பணியாற்றி வருகிறது. 'பாரத் ஜோடோ' யாத்திரை மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், இம்மாநிலத்தில் தான் அதிக நாட்கள் பயணம் செய்தார்.
'மக்களின் குரல்'
மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ., ஆட்சியில் இருப்பது காங்கிரசுக்கு சாதகமாக உள்ளது. பா.ஜ., அரசுக்கு எதிராக, 'மக்களின் குரல்' என்ற பெயரில், மாநில காங்., தலைவர்கள் பஸ் யாத்திரை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ., சார்பில் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கவும், காங்கிரஸ் திட்டங்களை முறியடிக்கவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பொறுப்பாளராகவும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை இணை பொறுப்பாளராகவும், அக்கட்சி தலைமை நியமித்துள்ளது.
பொதுவாக மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவரை, மற்ற மாநிலத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கும் வழக்கம், பா.ஜ.,வில் இல்லை.
ஏனெனில், தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டால், குறைந்தது இரண்டு மாதங்களாவது, அந்த மாநிலத்தில் முழு கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஆனால், கர்நாடகா சட்டசபை தேர்தல் களம் பா.ஜ.,வுக்கு சாதகமாக இல்லை என்றே, இதுவரையிலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானாவை ஒட்டிய பகுதி, வடக்கு கர்நாடகா, மத்திய கர்நாடகா, கடலோர பகுதி, மைசூரு மண்டலம், பெங்களூரு என, கர்நாடகாவின் அரசியல் சூழல், ஒவ்வொரு பகுதியிலும் மாறுபடுகிறது.
முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா இல்லாததால், மத்திய கர்நாடகாவில் பா.ஜ.,வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பெங்களூரில் பா.ஜ., செல்வாக்குடன் இருந்தது.
ஆனால், சர்வதேச நகரமாகிவிட்ட அங்கு, மக்கள் தொகையில் ஏற்பட்ட மாறுதல், பா.ஜ.,வுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், 90 தொகுதிகள் உள்ள வடக்கு கர்நாடகாவில், காங்கிரஸ் பலமாக இருப்பது, பா.ஜ.,வுக்கு பெரும் சவாலாக உள்ளது. இங்கு குறைந்தது 50 சதவீத இடங்களில் வென்றால் மட்டுமே, பா.ஜ.,வால் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உள்ளது.
போலீஸ் அதிகாரி
வடக்கு கர்நாடகாவில், அண்ணாமலை போலீஸ் அதிகாரியாக பணியாற்றியதால், பெலகாவி போன்ற இடங்களில், அவர் பிரபலமாக உள்ளார்.
கடலோர கர்நாடகாவிலும் அண்ணாமலைக்கு செல்வாக்கு உள்ளது. கட்சி சார்பற்ற இளைஞர்களை, பா.ஜ., பக்கம் ஈர்க்க, அண்ணாமலையின் பிரசாரம் உதவும் என, அக்கட்சி மேலிடம் நம்புகிறது. எனவேதான், கர்நாடகா தேர்தலில் அவர் களமிறக்கப்பட்டு உள்ளதாக, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.
பலமிக்க தலைவர்
பா.ஜ.,வில் நிலவும் கோஷ்டி பூசல், எடியூரப்பா முதல்வர் வேட்பாளராக இல்லாமல் தேர்தலை சந்திப்பது, காங்கிரசில் சித்தராமையா -- சிவகுமார் இணைந்து செயல்படுவது, சிறுபான்மையினர் ஓட்டுகள் உள்ளிட்டவை, பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரான அண்ணாமலையின் முன் இருக்கும் சவால்கள். இவற்றை எதிர்கொண்டு வெற்றி பெற்றால், பா.ஜ.,வின் பலமிக்க தலைவராக, அவர் மாறுவார் என்கின்றனர்.
சித்தராமையா, சிவகுமார் போன்ற செல்வாக்கு மிக்க காங்கிரஸ் தலைவர்களை, அவர்கள் போட்டியிடும் தொகுதியிலேயே முடக்குவது, ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸை வீழ்த்த வியூகம் வகுப்பது என, பல்வேறு பணிகளை தர்மேந்திர பிரதான், அண்ணாமலையிடம் பா.ஜ., மேலிடம் ஒப்படைத்திருப்பதாக கூறப்படுகிறது.