பொன்னேரி:பொன்னேரி அடுத்த, குண்ணம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 34. தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த, 6ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்ற பிரகாஷ் வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், பொன்னேரி பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் ஆண் சடலம் ஒன்று நீரில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பொன்னேரி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று ஆற்று நீரில் மிதந்த சடலத்தினை மீட்டனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மீட்கப்பட்ட சடலம், மூன்று தினங்களுக்கு முன் காணாமல் போன மேற்கண்ட பிரகாஷ், என்பது தெரிந்தது.
குளிக்க சென்றபோது, ஆற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.