பூந்தமல்லி:சென்னையை சுற்றியுள்ள கான்கிரீட் கலவை உற்பத்தி நிறுவனங்கள் தரத்தை, அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க, மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூந்தமல்லியில், மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் கூறியதாவது:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட கான்கிரீட் கலவை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் சில நிறுவனங்கள், விதிகளை மீறி தரமற்ற முறையில் கலவை உற்பத்தி செய்கின்றன.
கான்கிரீட் கலவையில், ஜல்லி, மணல், சிமென்ட் ஆகியவை கலக்க வேண்டும். ஆனால் இந்நிறுவனத்தினர், சிமென்ட் மற்றும் எம்-.சாண்ட்க்கு பதில், 'ஆஷ்' எனும் சாம்பல் கலக்கின்றனர். எம் - சாண்ட்க்கு தர பரிசோதனையே கிடையாது. மேலும், அனுமதியும் கிடையாது.
இந்நிலையில், இந்த தரமற்ற 'ரெடிமிக்ஸ்' எனும் கான்கிரீட் கலவையை, மாசு கட்டுப்பாட்டு சான்றிதழை வைத்து தயாரிக்கின்றனர்.
ஆந்திராவிலிருந்து மொத்த கழிவு பொருட்களும் இங்கு எடுத்து வந்து, கான்கிரீட் கலவை தயாரிக்கப்படுகிறது.
தரமற்ற வகையில் கான்கிரீட் கலவை தயாரிக்கும் நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, தனி அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும்.
இது குறித்து முதல்வர், தலைமை செயலர், பொதுப்பணி, காவல் உள்ளிட்ட துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.