புழல்:சென்னை புழல் மத்திய சிறையில், 2,600க்கும் அதிகமான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை காலை, மாலை நேரத்தில், சிறைக்காவலர்கள் கணக்கெடுப்பது வழக்கம்.
அதன்படி, விசாரணை கைதிகளை, சிறை பிளாக்குகளில் அடைப்பதற்கு முன், காவலர் வடிவேலு கணக்கெடுத்தார். அதற்காக, அனைவரையும் வரிசையில் நிற்க சொன்னார்.
அப்போது, அங்கிருந்த ஒரு கைதி, காவலரை பகிரங்கமாக மிரட்டியுள்ளார். இது குறித்து சிறை உயரதிகாரிகளிடம் காவலர் வடிவேலு புகார் செய்தார். சிறை அலுவலர் ராஜசேகரன் விசாரித்ததில், வடிவேலுவை மிரட்டியது, புழல், காவாங்கரை அருகே உள்ள திருநீலகண்டர் நகரைச் சேர்ந்த மணிகண்டன், 30 என்ற கைதி என்பது தெரிந்தது.
அவர், கடந்தாண்டு, 160 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், ராயபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்தது. சிறை அதிகாரிகளின் புகார் அடிப்படையில், புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.