செங்குன்றம்:செங்குன்றம், நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில், 18 வார்டுகளின் 110 தெருக்களில் உள்ள வீடு, கடை, ஹோட்டல், வணிக வளாகம் ஆகியவற்றில் இருந்து தினம் 8,000 கிலோ முதல் 10 ஆயிரம் கிலோ குப்பை சேகரிக்கப்படுகிறது.
இந்த குப்பையை குவிக்க, போதிய இடவசதியின்றி, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி நிர்வாகம் திணறுகிறது.
தற்காலிகமாக, புழல் ஏரிக்கரை அருகே குவிக்கப்படும் குப்பை, அவ்வப்போது எரிக்கப்படுபகிறது.
இதில் 'பிளாஸ்டிக்' கழிவில் இருந்து வெளியாகும், 'டையாக்சின்' வாயுவால், கண் எரிச்சல், சுவாசக்கோளாறால் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், வீடு, அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து அகற்றப்படும் குப்பையை, மக்கும், மக்காதவையாக பிரித்து வழங்க வேண்டும் என, துாய்மை பணியாளர்கள் மூலம், பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், பொதுமக்கள் அதை கண்டுகொள்வதில்லை.
சாதாரண குப்பை, உணவுக் கழிவு, பெண்களின் மாத விலக்கு கழிவு 'நாப்கின்' மற்றும் குழந்தைகளின் இயற்கை உபாதைக் கழிவு என, அனைத்தையும் ஒன்றாக கலந்து, குப்பைத் தொட்டியில் வீசுகின்றனர்.
இவற்றை பிரிக்கும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், மிகுந்த மன உளைச்சலுக்கும், உடல் நல பாதிப்பிற்கும் ஆளாகி அவதிப்படுகின்றனர்.
குப்பையை அகற்றுவோரும் மனிதர்கள்தான் என, மனிதநேயத்துடன் அனைவரும் உணர வேண்டும்.
கைகளால் எடுக்க முடியாத பல்வேறு கழிவுகளை, கனத்த பிளாஸ்டிக் பைகளில் அடைத்து துாய்மை பணியாளர்களிடம் வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும்.
அதனால், சுற்றுச்சூழல் சுகாதாரமும் பாதுகாக்கப்படும் என, அப்பணியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.