ராமநாதபுரம்--ராமநாதபுரத்தில் புத்தகதிருவிழாவையொட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் நுாலகம் இன்று(பிப்.9) முதல் செயல்படுகிறது. கிராம மக்களிடம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க இதனை நிரந்தரமாகசெயல்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரத்தில் பத்து நாட்கள் நடக்கும் புத்தக திருவிழா இன்று துவங்குகிறது. பொதுமக்களிடம் புத்தக திருவிழா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களை தினமும் அழைத்து வர அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
'நடமாடும் நூலகம்' என்ற பெயரில் பஸ்சில் நூலகம் ஒன்றை அமைத்து கிராமங்கள் தோறும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. தனியார் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்சின் உட்புறம் நூலகம் போன்று மாற்றி அமைக்கப்பட்டது. புத்தக ரேக்குகள், வாசிப்பு மேஜை, நாற்காலிகள், மின் விளக்கு, மின் விசிறி வசதிகளுடன் ஆடியோ வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட நூலகத்தில் இருந்து இதற்கு தேவையான புத்தகங்கள் வழங்கப்பட்டன. குழந்தைகள், பெண்களை கவரும் புத்தகங்களுடன் இலக்கியம், கதை, கவிதை, வரலாற்று நூல்கள் வைக்கப்படும் என நூலகத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நடமாடும் நூலகத்தை புத்தக திருவிழாவிற்கு மட்டுமின்றி நிரந்தரமாக செயல்பட பொதுமக்கள் வலியுறுத்தினர்.