முதுகுளத்துார்-முதுகுளத்துார் பகுதியில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு சென்று நேரடி நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
முதுகுளத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளை பொருட்களை தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தில் மறைமுக ஏலம் முறையிலும், பார்ம் டிரேடிங் எனப்படும் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு சென்று கொள்முதல் நடந்தது.
முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல், வெண்ணீர்வாய்க்கால், சாம்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு சென்று மேற்பார்வையாளர் மாடராஜன், சந்தை பகுப்பாய்வாளர் அலெக்ஸ் பாண்டியன் முன்னிலையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இதன் மூலம் முதுகுளத்தூர் வட்டாரத்தில் 155 மூடை நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஒரு குவிண்டால் அதிகபட்சம் ரூ.1659க்கு விலை போனது. விவசாயிகள் கூறியதாவது:
விவசாயிகளின் இருப்பிடத்திற்கு சென்று நெல் கொள்முதல் செய்யப்படுவதால் ஏற்று கூலி, இறக்கு கூலி, வண்டி வாடகை, கமிஷன் கொடுக்காமல் விற்பனை செய்தோம். இந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருந்ததால் குறைந்த அளவே விற்பனை செய்யப்பட்டது.
இனி வரும் நாட்களில் விளைவிக்கப்படும் விவசாய பொருட்கள் தேசிய வேளாண் மின்னணு திட்டத்தில் விற்பனை செய்யப்படும். நல்ல விலை கிடைத்துள்ளது, என்றார்.
முதுகுளத்தூர் வட்டாரத்தில் விளை பொருட்களை நேரடியாக சென்று கொள்முதல் செய்யப்படும் என்று ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.