வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்த, கருக்குப்பேட்டை கிராமத்தில் இருந்து, பெண்டை கிராமம் வழியாக, வில்லிவலம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
இச்சாலை குறுக்கே, வேகவதி ஆறு கடந்து செல்கிறது. இதன் மீது, பொதுப்பணி துறையினர் தரைப்பாலம் கட்டியுள்ளனர். இது, கடந்த 'வர்தா' புயலுக்கு சேதமடைந்தது.
இதையடுத்து, வில்லிவலம் ஊராட்சியில், 'நமக்கு நாமே திட்ட'த்தின் கீழ் மேம்பாலம் சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து பயன்பாட்டில் இருந்தது.
சமீபத்தில், பெய்த 'மாண்டஸ்' புயல் காரணமாக, தரைப்பாலத்தின் ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு இருந்தது. இருப்பினும், வாகன ஓட்டிகள் தரைப்பாலத்தின் மீது சென்று வந்தனர்.
நேற்று முன் தினம் இரவு திடீரென தரைப்பாலத்தின் நடுவே விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடை ஏற்பட்டுள்ளது.
பெண்டை கிராம மக்கள் கருக்குப்பேட்டை பஜாருக்கு செல்ல வில்லிவலம், தாங்கி, நாயக்கன்பேட்டை கிராமங்களின் வழியாக, 3 கி.மீ., துாரம் சுற்றி செல்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேத தரைப்பாலத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.