காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் சாலை, பெருநகரில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூச திருவிழா, கடந்த மாதம் 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதில், ஐந்தாம் நாள் உற்சவமான, ஜன., 31ல் திருக்கல்யாண உற்சவமும், ஏழாம் உற்சவமான பிப்., 2ல் தேரோட்டமும், ஒன்பதாம் நாள் உற்சவமான, பிப்., 5ல், 63 நாயன்மார்கள் உற்சவமும் விமரிசையாக நடந்தது. 10ம் நாள் திருவிழாவான 20 ஊர் சுவாமிகள் செய்யாற்றில் எழுந்தருளும் தைப்பூச ஆற்று திருவிழா கடந்த 5ல் விமரிசையாக நடந்தது.
இதில், 12ம் நாள் இரவு உற்சவத்தில், பிரம்மபுரீஸ்வரர் ரிஷப வாகனத்திலும், பட்டுவதனாம்பிகை சந்திர பிரபையிலும், முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், விநாயகர் மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சிறிய ரிஷப வாகனத்திலும் என, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது.
விழாவில் பங்கேற்ற பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை வழிபட்டனர்.