திருவாடானை-திருவாடானை தாலுகாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
வெளி மாவட்ட மீனவர்கள் சோலியக்குடியில் தங்கி விசைப்படகில்மீன் பிடிக்கின்றனர். சூடை, காளை, சீலா, பாறை, திருக்கை, நகரை, இறால், முரல், கணவாய், நண்டு போன்ற விலை உயர்ந்த மீன்கள் பிடிக்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது.
இப்பகுதியில் வசிக்கும் மீனவ பெண்கள் மீன்களை காய வைத்து கருவாடுகளாக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். வஞ்சிரம், வாளை, நெத்திலி, சுறா போன்ற பல வகை கருவாடுகளை பதப்படுத்தி காயவைக்கப்படுகிறது. இதில் சில வகை கருவாடுகளில் மருத்துவ குணம் அதிகம் உள்ளது.
குறிப்பாக சீலா கருவாட்டில் குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரக்கும் மருத்துவ குணம் அதிகமாக இருப்பதால் ஏராளமானோர் விரும்பி வாங்கி செல்கின்றனர். அசைவ பிரியர்களின் உணவில் முக்கிய அங்கமாக கருவாடு திகழ்வதால் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
கத்தாலை, நகரை, வாலை போன்ற சிறிய வகை மீன்களை மொத்தமாக வாங்கி தண்ணீரில் சுத்தப்படுத்தி, உப்பு கலந்து மூன்று நாட்கள் பதப்படுத்தி அதன் பின் வெயிலில் காய வைக்கின்றனர். மீன்கள் ஓரிரு நாட்களில் காய்ந்து கருவாடாக மாறி விடுகிறது.