ராமநாதபுரம்--ராமநாதபுரம் சந்தைத் திடல் பகுதியில் தரைத்தளம், கூரை வசதி இல்லாததால் மழை, வெயிலால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே சந்தை திடலில் ஒவ்வொரு புதன் தோறும் வாரச்சந்தை நடக்கிறது. ராமநாதபுரம் சுற்றுப்புற கிராம விவசாயிகள், வியாபாரிகள் மட்டுமின்றி வெளி மாவட்ட வியாபாரிகளும் பொருட்களை விற்பனை செய்ய குவிகின்றனர். சந்தை திடலில்தரைத்தளம், கூரை வசதியில்லை. குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் பெயரளவில் மட்டுமே உள்ளது.
வெயில், மழையில் தப்பிக்க வியாபாரிகள் தார் பாய்கள், பிளாஸ்டிக் கவர்களை வாடகைக்கு வாங்கி பந்தல் அமைக்கின்றனர். இருப்பிடத்திற்குமேல் அதிக மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு கடைகள் உள்ளே வைப்பதால் பொருட்களை வாங்கவும், வியாபாரிகள் கொண்டு வரவும் சிரமப்படுகின்றனர்.
கட்டணம் வசூல் செய்யும் நகராட்சி நிர்வாகம் வாரச்சந்தை நாட்களில் சந்தை திடல் வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்யவும், துாய்மையாக சுத்தம் செய்து தர வேண்டும், என வியாபாரிகள், மக்கள் வலியுறுத்தினர்.
Advertisement