அண்ணா சதுக்கம், மெரினா, காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லம் உள்ளது. இதன் அருகே உள்ள சிக்னலில், பாதசாரிகள் நடைபாதை மற்றும் சாலையில் இளைஞர் ஒருவர் 'பல்டி' அடித்து அடாவடி செய்யும் 'வீடியோ', சமூக வலைதளத்தில் பரவியது.
வாகனங்களுக்கு இடையூறாக, சாலையின் நடுவே வீடியோ எடுக்கும் வரை, போலீசார் என்ன செய்தனர் என கேள்வி எழுந்தது.
இதையடுத்து, அண்ணா சதுக்கம் போலீசார், பல்டி அடித்து சாகசம் செய்தது யார் என விசாரித்தபோது, திருவல்லிகேணியைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரிந்தது.
மேலும், கடந்த 5ல் வீடியோ எடுத்து, 'இன்ஸ்டாகிராம்' தளத்தில் பதிவிட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், விக்னேஷ், அவருக்கு உதவியாக இருந்த நண்பர்களை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, 'என் செயலுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.
இது போன்ற வீடியோக்களை எடுக்கமாட்டேன்' என மன்னிப்பு கேட்டனர். இவர்கள் மன்னிப்பு கேட்பது வீடியோவாக எடுக்கப்பட்டு, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
Advertisement