சென்னை, சென்னையில், பருவமழை முடிந்து, பரவலாக குளிராக உள்ளது. இதனால், கொசு தொல்லை அதிகரித்து, மக்களின் துாக்கத்தை தொலைத்து மிகவும் சிரமப்படுத்துகிறது.
குறிப்பாக, நீர்நிலைகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. இதை தடுக்க, மாநகராட்சி சார்பில், 'ட்ரோன்' எனும் ஆளில்லா இயந்திரம் வழியாக, கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
சென்னை மாநகராட்சி எல்லையில் உள்ள பகிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாயில், கொசு மருந்து தெளிக்கும் பணி துவங்கியது.
இரண்டாம் கட்டமாக நேற்று, கேப்டன் காட்டன், கொடுங்கையூர், வியாசர்பாடி, பகிங்ஹாம், ஆர்.வி.நகர், மாம்பலம், விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் அடையாற்றில், ஆளில்லா இயந்திரம் வாயிலாக கொசு மருந்து தெளிக்கப்பட்டது.
இம்மாதம் முழுதும், இப்பணி தொடர்ந்து நடக்கும் என்றும், இதன் வாயிலாக, கொசுத்தொல்லை குறையும் எனவும், மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.