ஆர்.எஸ்.மங்கலம்-நிலத்தடி நீர்மட்டம் உயர்வால் ராமநாதபுரம் மாவட்டத்தில் புளி விளைச்சல் அதிகரித்துள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு புளிய மரங்கள் உள்ளன. மற்ற மாவட்டங்களை விட புதுக்கோட்டை மாவட்டம் புளி விளைச்சலில் முதன்மை வகிக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவ மழையின் போது கண்மாய், குளங்களில் சேகரித்து வைக்கப்பட்ட தண்ணீரால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் குளம், கண்மாய் கரைகள், ரோட்டோரங்களில் உள்ள புளிய மரங்களில் வழக்கமாக உள்ள புளி காய்ப்பை விட தற்போது அதிகரித்துள்ளது. ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, தேவிபட்டினம், நயினார்கோவில் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலும் புளி மகசூல் அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தரத்திற்கு ஏற்ப கிலோ ரூ.90 முதல் 120 வரை விற்கப்பட்டு வந்தது. நடப்பு ஆண்டில் தற்போது புளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் கிலோவுக்கு ரூ.40 வரை விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.