காரைக்கால் -கணவனை இழந்த பெண்ணை, திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, ரூ.7.5 லட்சம் மோசடி செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி, காரைக்கால் திருநள்ளாறு, கீழ சுப்ராயபுரத்தை சேர்ந்தவர் சுதா,39; கணவரை இழந்த சுதா, காய்கறி கடையில் வேலை செய்து வருகிறார். இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், காய்கறி வாங்க கடைக்கு வரும் திருநள்ளாறு செருமாவிலங்கையை சேர்ந்த போலீஸ்காரர் குணசேகரன்,44; என்பவருடன் சுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்வதாக குணசேகரன் உறுதி அளித்தாதல், இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், குணசேகரன், சுதாவிடம் ரூ.10 லட்சம் பணம் கேட்டார். அவரும், நகைகள், சேமிப்பு பணம் மற்றும் சுய உதவிக்குழுவில் பெற்ற கடன் ஆகியவற்றை சேர்த்து ரூ.7.5 லட்சம் கொடுத்தார்.
பின்னர் சுதா, திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய போது குணசேகரன் மறுத்து விட்டார். பணத்தை திருப்பி கேட்டபோது ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து சுதா, திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் வழக்கு பதிந்து, குணசேகரனை கைது செய்து விசாரித்து வருகிறார்.