தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில், 70 வார்டுகளில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை, 5.59 லட்சம் பேர். இதில், சொத்து வரி செலுத்துவோர் 2.12 லட்சம் பேர் உள்ளனர்.
இம்மாநகராட்சியில், நடப்பாண்டின் வரி வசூல், 247 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, அவற்றை வசூல் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக, 17 இடங்களில் வசூல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
ஏழு வருவாய் ஆய்வாளர்கள், 24 வருவாய் உதவியாளர்கள் மூலம், வரி செலுத்தாத வீடு, கட்டடங்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்படுகிறது. மற்றொரு புறம், நிலுவை வைத்துள்ளோருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலமும் குறுஞ்செய்தி அனுப்பி வசூல் செய்யப்படுகிறது. இதுவரை, 65 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக சில நாட்களுக்கு முன், அழகுமீனா ஐ.ஏ.எஸ்., பொறுப்பேற்றார்.
அவர், முதல் நடவடிக்கையாக, மண்டலங்களில் நிலவும் குப்பை பிரச்னையை ஆய்வு செய்து, அதிகாரிகளை எச்சரித்துள்ளார். அடுத்த நடவடிக்கையாக, 100 சதவீத வரி வசூலில் கவனம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக, வருவாய்த் துறை பிரிவில் நேற்று, ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், இம்மாத இறுதிக்குள், 90 சதவீதம், மார்ச் இறுதிக்குள் 100 சதவீத வரி வசூலை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், மாநகராட்சியின் நடவடிக்கைகளை அலட்சியப்படுத்தி, வரி செலுத்தாத சொத்துக்களை 'ஜப்தி' செய்யவும், மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா உத்தரவிட்டு உள்ளார்.
மொபைல் போனில், 'பிளே ஸ்டோர்' தளத்தில் TN Urban Esevai என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் மூலம், சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை திட்ட கட்டணங்களை, வீட்டில் இருந்தபடியே செலுத்தலாம். மேலும், புகார்களையும் இதன் வாயிலாகவே தெரிவிக்கலாம்.
மொபைல் போனில், 'பிளே ஸ்டோர்' தளத்தில் TN Urban Esevai என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் மூலம், சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை திட்ட கட்டணங்களை, வீட்டில் இருந்தபடியே செலுத்தலாம். மேலும், புகார்களையும் இதன் வாயிலாகவே தெரிவிக்கலாம்.