அன்னுார் : துணைத் தலைவரை நீக்கக்கோரி, வார்டு உறுப்பினர்கள், கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
குன்னத்துார் ஊராட்சி தலைவராக, கீதாவும், துணைத்தலைவராக மூர்த்தியும் உள்ளனர். ஒன்பது வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஆறு வார்டு உறுப்பினர்கள், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது :
ஊராட்சி துணைத் தலைவர் மூர்த்தியின் மனைவி மோட்டார் ஆபரேட்டராக உள்ளார். இதை பயன்படுத்தி துணைத் தலைவர், தொழிற்சாலைகளுக்கு அதிகமாக குடிநீர் சப்ளை செய்துவிட்டு, பொதுமக்களுக்கு குறைவாக வழங்குகிறார்.
ஊராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு தராமல் அரசு நலத்திட்டங்களுக்கு எதிராக செய்தி பரப்பி வருகிறார். தன்னிச்சையாக செயல்படுகிறார். பேரூராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் போட காசோலையில் கையெழுத்து இடாமல் இழுத்தடிக்கிறார், இதனால் ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க முடியவில்லை.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இப்புகார் குறித்து துணைத் தலைவர் மூர்த்தி கூறுகையில், தலைவரும் சில வார்டு உறுப்பினர்களும் செய்த முறைகேடு காரணமாக, தலைவருடைய 'செக்' பவர் கலெக்டரால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு நான் காரணம் என நினைத்து என் மீது பொய் புகார் சுமத்துகின்றனர்.
காசோலையில் உடனுக்குடன் கையெழுத்திட்டு வருகிறேன். தன்னிச்சையாக செயல்படுவதில்லை. ஊராட்சியில் நடந்த முறைகேடு குறித்து சென்னையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் புகார் செய்ய உள்ளேன். வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளேன், என்றார்.