சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு ஏற்ப, அதை ஒட்டி அமைந்துள்ள புறநகர் பகுதிகளும், நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன.
குறிப்பாக, சென்னையை ஒட்டி அமைந்துள்ள, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில், 10 ஆண்டுகளில் தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளன.
அதற்கு ஏற்ப அப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஏதுவாக, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகியவை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டன.
அப்பகுதிகளில், சாலை, குடிநீர் வசதிகள் ஏற்படுத்துவது மட்டுமின்றி, அவர்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய, ரயில் போக்குவரத்து வசதியை உருவாக்குவதும் அவசியமாகி உள்ளது.
பயணியர் போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்துக்காக, 'ஆவடி --- ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி வழித்தடத்தில், 60 கி.மீ., துாரம் புது ரயில் பாதை அமைக்கப்படும்' என, 2013ல் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டப் பணியை நிறைவேற்ற, மொத்தம், 839 கோடி ரூபாய் தேவைப்படும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டது. எனினும், அப்போது, போதிய அளவில் நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன.
இத்திட்டம் எப்போது வேகமெடுக்கும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்தனர்.
கடந்த 2022ல், புதிய ரயில் பாதை திட்டத்துக்கு இறுதிக்கட்ட சர்வே பணிகள் மேற்கொள்ள, தெற்கு ரயில்வே, 'டெண்டர்' வெளியிட்டது. இப்பணி வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்தாண்டு 'ரயில்வே பட்ஜெட்'டில், ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி இடையேயான புதிய ரயில் திட்டத்துக்கு, 58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இத்திட்டத்துக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு உள்ளது.
ஆவடி - கூடுவாஞ்சேரி திட்டத்திற்கு, மொத்தம் 864 கோடி ரூபாய் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பூர்வாங்க பணிகள் இன்னும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வே முடிந்து, நில எடுப்பு செய்ய இருக்கும் பகுதிகள் ஆராய்ந்து, உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி, இழப்பீடு வழங்கப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்படும்.
ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதியில் மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் சாலை போக்குவரத்தையே பெரிதும் நம்பியிருக்கும் நிலையில், ரயில் போக்குவரத்துக்கான பணிகள் துவங்கியுள்ளதால், ஸ்ரீபெரும்புதுாரை சுற்றியுள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம், பரந்துார் பகுதியில் அமைய இருக்கிறது. விமான நிலையத்தையும், காஞ்சிபுரத்தையும் இணைக்கும் வகையில், ரயில் திட்டம் கொண்டு வர வேண்டும் என, காஞ்சிபுரம் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சுற்றுலா மற்றும் ஆன்மிக நகரமான காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு, செங்கல்பட்டு வழியாக தான் ரயிலில் செல்ல முடிகிறது.
ஸ்ரீபெரும்புதுாருக்கு ரயில் தடம் அமைக்கப்பட்டால், காஞ்சிபுரம் வரை அவற்றை நீட்டிக்க, மத்திய ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காஞ்சிபுரம் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
- நமது நிருபர் -