விழுப்புரம்-மயிலம் அருகே கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
விழுப்புரம் மார்க்கத்திலிருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்த கண்டெய்னர் லாரி, நேற்று அதிகாலை சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
அப்போது, கூட்டேரிப்பட்டு பி.டி.ஓ., ஆபிஸ் எதிரில் வந்தபோது, அருகே ஒரு வழிப்பாதை என்பதால், அங்கு வாகனங்கள் சீராக சென்றன. அப்போது, எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த சென்னை அரசு பஸ் ஒன்று, அந்த கண்டெய்னர் லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பஸ் பயணிகள் பலர் காயமடைந்தனர். உடனடியாக அவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில், ஓட்டுநர் வந்தவாசி கொடுங்கலுாரைச் சேர்ந்த சீனிவாசன், 46; நடத்துனர், வந்தவாசி வரதராஜ், 40; லாரி ஓட்டுநர், உத்திர பிரதேசம் ஹரிப்பூரை சேர்ந்த லக்கான், 28; மற்றும் பஸ்சில் பயணம் செய்த சேலம் சித்தன்,75; ஆத்துார் முருகேசன், 34; கள்ளக்குறிச்சி வெங்கடேசன், 30; சிவா, 25, வந்தவாசி வரதராஜ், 52; சென்னை அலமேலு, 34; ஜெயவேல்,34. உள்ளிட்டோர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
மயிலம் போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.