திண்டிவனம்-புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலையில், மரக்காணம் ரோடு அருகில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலை 38 கிலோ மீட்டரை கொண்டுள்ளது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கிறது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் மட்டுமின்றி, சென்னை, செஞ்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வாகனங்களும் கடந்து செல்கிறது.
திண்டிவனம் மரக்காணம் ரோடு சந்திப்பு அருகில், சாலையோரம் கொட்டியுள்ள குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள், கடைக்காரர்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இது மட்டுமின்றி குப்பைகளை மாடு, நாய் என கால்நடைகள் கிளறுவதால், துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையை மொரட்டாண்டி டோல்கேட் நிர்வாகம் பராமரித்து வருகிறது. தினந்தோறும் டோல்கேட் நிர்வாகத்தின் ரோந்து வாகனம் அவ்வழியாக தான் சென்று வருகிறது. எனவே சாலை ஓரம் குப்பைகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.