விழுப்புரம்-விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
முகாமை கலெக்டர் பழனி தலைமை தாங்கி, துவக்கி வைத்து கூறியதாவது;
விழுப்புரம் மாவட்டத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டில் 18 வயதிற்குட்பட்ட 4682 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இம்மாணவர்களுக்காக விழுப்புரம் நகராட்சி மற்றும் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 8.2.2023 முதல் 2.3.2023 வரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
இன்று (நேற்று) நகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும், 9ம் தேதி வானுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், 10ம் தேதி திருவெண்ணெய்நல்லுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நடக்கிறது.
14ம் தேதி மணம்பூண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், 15ம் தேதி கூட்டேரிப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், 16ம் தேதி செஞ்சி சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், 17ம் தேதி மேல்மலையனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடக்கிறது.
வரும் 21ம் தேதி காணை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், 22ம் தேதி விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 23ம் தேதி முருங்கம்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், 24ம் தேதி பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், 28ம் தேதி கோலியனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
வரும் 1ம் தேதி கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், 2ம் தேதி வல்லம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் மருத்துவ சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
முகாமில் தகுதியுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களை தேர்வு செய்வதற்கு எலும்பு முறிவு மருத்துவர், மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், கண் மருத்துவர் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
இதை தொடர்ந்து, தலா 9,475- வீதம் 6 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 56,850 ரூபாய் மதிப்பீட்டில் மடக்கு சக்கர நாற்காலியும், தலா 1,950- வீதம் 2 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நடை பழகு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
அப்போது, நகர்மன்ற சேர்மன் தமிழ்ச்செல்வி, துணை சேர்மன் சித்திக் அலி, சி.இ.ஓ., கிருஷ்ணப்பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.