செஞ்சி-தார் பிளான்ட் நடத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்களுடன் தாசில்தார் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட வில்லை.
மேல்மலையனுார் தாலுகா பழம்பூண்டி கிராமம் அருகே விவசாய நிலங்கள் உள்ள பகுதியில் சம்பத் என்பவர் தார் பிளாண்ட் நடத்தி வருகிறார்.
இதில் இருந்து வெளியேறும் துாசு காற்று மாசு படுவதுடன், சுற்று சூழல் பாதிப்பும் ஏற்படுவதாக கூறி கடந்த 6ம் தேதி கிராம விவசாயிகள் சாலை மறியல் செய்தனர்.
இதையடுத்து அவலுார்பேட்டை போலீசாரின் பரிந்துரையின் பேரில் நேற்று முன்தினம் மாலை மேல்மலையனுார் தாசில்தார் அலெக்சாண்டர் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர்கள் இளையராஜன், சங்கவி, தார் பிளாண்ட் உரிமையாளர் சம்பத், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் பூங்காவனம், மணவாளன், தனிப்பிரிவு ஏட்டு அக்தர்பாஷா மற்றும் கிராம விவசாயிகள், பொது மக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில் பிளாண்ட் உள்ள பகுதியில் சுற்று சூழலை பாதுகாக்க மரக்கன்று நடுவது, தண்ணீர் தெளிப்பான்களை கொண்டு துாசு பரவாமல் தடுப்பது, சுற்றுச்சுவரின் உயரத்தை 8 அடியாக உயர்த்துவது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதை கிராம மக்கள் ஒப்பு கொள்ளாமல் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். இதனால் சமாதான கூட்டம் உடன்பாடு ஏற்படாமல் முடிவடைந்தது.