கே.கே.நகர், மேற்கு மாம்பலம், சக்கரபாணி தெருவைச் சேர்ந்த சிந்து, 37. இவர், நேற்று முன்தினம் மதியம் குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வர காரில் சென்றார்.
கே.கே.நகர், 20வது தெரு, 4வது செக்டார் அருகே காரை நிறுத்தி பள்ளிக்கு சென்றவர், சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, கார் கண்ணாடியை மர்ம நபர் கட்டையால் உடைப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே, சிந்து அவரிடம் 'ஏன் கார் கண்ணாடியை உடைத்தாய்' எனக் கேட்ட போது, 'என் வீட்டு வாசலில் கார் நிறுத்தினால் இப்படி தான் செய்வேன்' எனக் கூறி, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சிந்து தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த கே.கே.நகர் போலீசார், அந்த நபரிடம் விசாரித்தனர். அப்போது அவர், போலீசாரையும் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், தான் வைத்திருந்த கட்டையால் போலீஸ்காரரை தாக்கினார்.
இதையடுத்து, அவரை மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், பிடிபட்ட நபர் கே.கே., நகர் 4வது செக்டாரைச் சேர்ந்த அரவிந்த், 40, என தெரியவந்தது.
தொடர் விசாரணையில், சில மாதங்களுக்கு முன், முதல்வர் குறித்து இவர் அவதுாறு செய்தி பரப்பியது தொடர்பாக, 'சைபர் கிரைம்' போலீசார் கைது செய்ததும் தெரியவந்தது.