காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 46வது வார்டு, ஓரிக்கை பழைய காலனி பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கு முன் அப்பகுதி மக்களுக்காக சிறு மின் விசை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
அதன் வாயிலாக அப்பகுதி மக்கள் குடிக்க, துணி துவைக்க பயன்படுத்தி வந்தனர். இரு ஆண்டுகளாக மோட்டார் பழுது காரணமாக பயன்பாடு இல்லாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த குடிநீர் வசதியை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இந்த பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட சிறு மின் விசை மோட்டார் குடிநீர் துவக்கப்பட்ட போது எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.
இந்த மோட்டார் பழுதாகி இரு ஆண்டுகள் கடந்து விட்டன. இன்னும் சீரமைக்கவில்லை.
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட இந்த குடிநீர் தொட்டி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மாநகராட்சி அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.