காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அண்ணாதுரை இல்லத்தில், அவரின் திரு உருவ சிலைக்கு, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி மலர் மாலை அணிவித்தார். முன்னதாக, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வரவேற்றார்.
இதையடுத்து, ஏனாத்துார் மீனாட்சி மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை உதயநிதி துவக்கி வைத்தார்.
அதை தொடர்ந்து, மூவலுார் ராமாமிர்தம் அம்மையாரின் நினைவு புதுமைப்பெண் திட்டத்தில், 1,341 கல்லுாரி மாணவியருக்கு நிதியுதவி வழங்கும் விழாவை துவக்கி வைத்தார்.
இதையடுத்து, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
மதுரையில், 71 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி ஆணை வழங்கினேன். இன்று, மூவலுார் ராமாமிர்தம் அம்மையாரின் நினைவு புதுமை பெண் திட்டத்தில், 2வது கட்ட துவக்க விழாவில் பங்கேற்றுள்ளேன்.
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகள் படிப்பு இடை நிற்றலை தவிர்க்கும் வகையிலும், உயர் கல்வி கற்கும் நோக்கத்துடன், முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 65 கல்லுாரிகளில் முதற்கட்டமாக, 3,917 மாணவியருக்கு, புதுமைப்பெண் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது.
இன்று, இரண்டாவது கட்டமாக, 1,341 மாணவியருக்கு வழங்கியுள்ளோம். அரசு பெண்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், சிறு, குறு மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் மற்றும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன். காங்கிரஸ் - எம்.எல்.ஏ.,செல்வப்பெருந்தகை ஆகியோர் பங்கேற்றனர்.