மேட்டுப்பாளையம் : குட்டையூரில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில், முப்பெரும் விழா நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையம் குட்டையூர் அருகே, மாதேஸ்வரன் மலை அடிவாரத்தில் சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேகம் நடந்து, ஆறாம் ஆண்டு விழா, மகாலட்சுமி, ஆஞ்சநேயர் கோவில் பூமி பூஜை, அன்னதான கூடம் திறப்பு விழா என, இரண்டு நாட்கள் நடைபெறும், முப்பெரும் விழாவின், முதல் நாள் விழா நேற்று துவங்கியது.
மங்கள இசையுடன் காலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பூஜை, யாகத்தை ஜோதிலட்சுமி மனோகர் துவக்கி வைத்தார். சாய் விஷ்ணு யாகம், புண்யவ வாசனம், மாத்ருக பூஜை, நந்தி சாரதம் ஆகிய பூஜைகள் நடந்தன. பூஜைகளை சீரடி தலைமை குருக்கள் பாலா சாகிப் ராஜாராம் ஜோஷி செய்தார். அதைத் தொடர்ந்துமேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம், கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை, சத்குரு சாய் சேவா சங்கம் இணைந்து, இலவச மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் பரிசோதனை முகாமை நடத்தியது. அதைத் தொடர்ந்து ஆரத்தியும், அன்னதானமும் நடந்தது.
மாலையில் அக்னி ஸ்தாபனம், அபிஷேகம், முக்தி தேவதை ஸ்தாபனம், நவகிரக ஸ்தாபனம், ஈசன் ருத்ர ஸ்தாபனம் பந்ர மண்டல ஸ்தாபனம் ஆகிய பூஜைகள் நடந்தன. இரண்டாம் நாள் இன்று காலை, குருஸ்தானில் சிறுதுளி அமைப்பின் நிர்வாகி வனிதா மோகன் மரக்கன்றுகளை நட உள்ளார். அதைத் தொடர்ந்து யாகப் பூஜை, பிரதி பூஜனம், பவிதானம், புரணாகதி ஹோமம் ஆகியவை நடைபெற உள்ளது.
பின்பு மகாலட்சுமி கோவில், ஆஞ்சநேயர் கோவில் பூமி பூஜையும், அன்னதான கூடம் திறப்பு விழாவும், நடைபெற உள்ளது.
மாலை, 7:00 மணிக்கு திரைப்பட பாடகர் மனோ மற்றும் அபிஷேக் ராஜ் வீரமணி, சவுமியா அபிஷேக் ராஜ் ஆகியோரின் இசை நிகழ்ச்சியும், பாபாவின் சத்சரிதம் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை சத்குரு சாய் சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.