அசோக் நகர், அசோக்நகர் 7வது தெருவைச் சேர்ந்த சிவரஞ்சனி, 29. இவர், அசோக் நகர் 3வது அவென்யூவில், தள்ளுவண்டியில் சிக்கன் பக்கோடா கடை நடத்தி வருகிறார்.
கடந்த 6 ம் தேதி இரவு, சிவரஞ்சனி தள்ளுவண்டி கடையிலிருந்தபோது, அங்கு வந்த பாபு என்பவர், தகராறு செய்து, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
உடனே சிவரஞ்சனி 'இங்கு தகராறு செய்யாதீர்கள், இங்கிருந்து செல்லுங்கள்' எனக் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த பாபு, சிவரஞ்சனியை கையால் தாக்கி, கீழே தள்ளி கடையில் இருந்த கொதிக்கும் எண்ணெயை அவர் மீது ஊற்ற முயன்றார்.
அப்போது, சிவரஞ்சனி சத்தம் போடவே, அருகிலிருந்தவர்கள் அவரை பிடிக்க வந்ததால், பாபு தப்பி ஓடினார். இது குறித்து கொடுத்த புகாரையடுத்து, அசோக் நகர் போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
இதையடுத்து, தப்பியோடிய அசோக் நகர் 6வது தெருவைச் சேர்ந்த பாபு, 36, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில், பாபுவிற்கும் சிவரஞ்சினியின் மைத்துனருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, பாபு கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றது தெரிய வந்தது. இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில் சிவரஞ்சனியை தாக்கியது தெரியவந்தது.