ஊட்டி : அவலாஞ்சி 'டிரவுட்' மீன் பண்ணை, 2.50 கோடி ரூபாயில் புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊட்டி அருகே அவலாஞ்சியில் டிரவுட் மீன்குஞ்சு பொறிப்பக பண்ணை உள்ளது. இப்பண்ணையில் 'டிரவுட் மீன்களிலிருந்து முட்டைகளை எடுத்தல்; அம்முட்டைகளிலிருந்து மீன்குஞ்சுகளை உற்பத்தி செய்தல்; மீன் குஞ்சுகள் வளர்த்தல்,' உள்ளிட்ட பணிகள் பண்ணையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சராசரியாக, 70 ஆயிரம் எண்ணிக்கையில் 'டிரவுட்' மீன்குஞ்சுகள் வளர்த்தெடுக்கப்படுகிறது.
கடந்த, 2019 ம் ஆண்டு செப்., மாதம் பெய்த கனமழையின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அவலாஞ்சி 'டிரவுட்' மீன் குஞ்சு பொறிப்பகம் சேதம் அடைந்தது. பின், சீரமைக்கப்பட்டு, நடப்பாண்டு ஜம்மு--காஷ்மீர் மாநிலம் கோக்கர் நாக் அரசு டிரவுட் மீன் பண்ணையிலிருந்து, 20 ஆயிரம் எண்ணிக்கையிலான டிரவுட் மீன் குஞ்சு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு இந்த பண்ணையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அம்ரித் கூறுகையில்,''மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, 2.50 கோடி ரூபாயில் அவலாஞ்சி 'டிரவுட்' மீன் பண்ணையில் செக்டேம், வடிகால், தடுப்பு சுவர் உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டு 'டிரவுட்' பண்ணை புனரமைக்கப்படும்,''என்றார்.