அன்னுார் : குவியும் குப்பைகளால், கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலை குப்பை நெடுஞ்சாலையாக மாறி உள்ளது.
கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையின் மையமாக அன்னுார் உள்ளது. தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் அன்னுார் வழியாக கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில் செல்கின்றன.
ஊராட்சிகளில் போதுமான துாய்மை பணியாளர் இல்லாதது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தாதது, பொதுமக்களிடம் விழிப்புணர்வில்லாதது ஆகிய காரணங்களால் கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலை குப்பை நெடுஞ்சாலையாக மாறிவிட்டது. அன்னுாரில் துவங்கி எல்லப்பாளையம் பிரிவில் சாலையை ஒட்டி குப்பையை கொட்டியுள்ளனர். இதையடுத்து கணேசபுரத்தில் கடத்துார் பிரிவு, ஓரைக்கால் பாளையம் பிரிவு என பல இடங்களில் சாலை ஓரத்தில் மலை போல் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன,
பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், குன்னத்துார், காட்டம்பட்டி மற்றும் மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி நிர்வாகங்கள் இங்கு குப்பைகளை கொட்டுகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
கொட்டப்படும் குப்பைகளில் பிளாஸ்டிக்குகள் அதிக அளவில் உள்ளன. இவை காற்றில் பறந்து ரோடு முழுவதும் சிதறி கிடக்கிறது. சில சமயத்தில் காற்று வேகமாக அடிக்கும் போது வாகனங்களில் செல்வோர்க்கு இடையூறு ஏற்படுத்தி விபத்து ஏற்படுகிறது.
இந்த பிளாஸ்டிக் கழிவுகளை தெரியாமல் உட்கொள்ளும் கால்நடைகள் நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றன, சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங்கள் உடனடியாக தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி குப்பை கொட்டுவதை தடை செய்ய வேண்டும். மேலும் குப்பை கொட்டும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ஊராட்சி நிர்வாகிகள் கூறுகையில், 'ஊராட்சியில் போதுமான துாய்மை பணியாளர்கள் இல்லை. குறைவான சம்பளம் என்பதால் இந்த பணிக்கு பலர் முன் வருவதில்லை. போதுமான பேட்டரி வாகனங்கள் இல்லை. இவற்றை முழுமையாக அளித்தால் மட்டுமே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த முடியும்,' என்றனர்.