கோத்தகிரி : கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், தேயிலை தோட்டங்கள் பனியில் கருகி உள்ளதால், வருமானம் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரியில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. பசுந்தேயிலை விலை வீழ்ச்சியால், விவசாயிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜன., முதல் வாரத்தில் தொடர்ந்த பனிப்பொழிவு காரணமாக, மாவட்டத்தில் குறிப்பாக, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் பனியால் கருகியுள்ளதால் விவசாயிகள் மகசூல் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கருகியுள்ள தேயிலை தோட்டங்களில் குச்சிகள் மட்டுமே எஞ்சி நிற்பதால், மழை பெய்தால் மட்டுமே, பசுந்தேயிலை துளிரவிட வாய்ப்புள்ளது.
வரும் நாட்களில் வறட்சியின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் பசுந்தேயிலை மகசூல் வெகுவாக குறைந்து விவசாயிகள் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
பனியால் பாதிக்கப்பட்ட தேயிலை விவசாயிகளுக்கு, மத்திய, மாநில அரசுகள் இடைக்கால மானியம் வழங்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.
மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்க தலைவர் தும்பூர் போஜன் கூறுகையில்,''கடுமையான பனிப்பொழிவால் மகசூல் குறைந்துள்ளதாலும், விலை வீழ்ச்சியாலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும்,'' என்றார்.