செஞ்சி-வெளியிடங்களில் பிடிக்கும் குரங்குகளை வல்லம் தொண்டியாற்று பகுதியில் விட்டு செல்வதால் வல்லம் கிராமத்தில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
மலை சார்ந்த கிராமங்களை கொண்ட செஞ்சி பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் குரங்குகளின் அட்டகாசம் உள்ளது.
இது போன்ற கிராமங்களில் பிடிக்கப்படும் குரங்குகளை திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் அடுத்த வனப்பகுதிகளில் விடுவிக்கின்றனர்.
இது போன்று பிடிக்கப்பட்ட குரங்குகளை சில கிராமங்களில் இருந்து செஞ்சியை அடுத்த வல்லம் தொண்டியாற்று பகுதியில் விடுவித்தனர்.
குறைந்த எண்ணக்கையில் விடப்பட்ட குரங்குகள் தற்போது நுாற்றுக்கும் மேல் பெருகி விட்டன. இவை வல்லம் கிராமத்தில் வீடுகளுக்குள் புகுந்து மளிகை, காய்கறிகள், தின்பண்டங்களை எடுத்து செல்வதுடன், வீட்டில் உள்ள பொருட்களையும் கீழே தள்ளி சேதப்படுத்தி வருகின்றன.
வீடுகளில் வளர்க்கப்படும் பூஞ்செடிகள், மாமரங்கள், தென்னை மரங்களையும் கடித்து சேதப்படுத்தி வருகின்றன. குரங்குகளை விரட்டும் பெண்களையும், சிறுவர், சிறுமியரையும் கடிக்க வருகின்றன.
நாளுக்கு நாள் குரங்கு தொல்லை அதிகரித்து வருவாதல் குரங்குகளை பிடிக்க ஊராட்சி நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.