அண்ணா நகர்,அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் மந்தான், 33. இவர், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தங்கி மொபைல் போன் கடையில் பணி புரிந்தார். இவரது நண்பர் அரி ஓம், 28.
இருவரும் நேற்று அதிகாலை, சென்னை கடற்கரையில் சூரிய உதயம் பார்ப்பதற்காக, 'யமஹா எப்.இசட்' இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் தடுப்பு சுவரில் மோதியது. இதில், இருவரும் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் மந்தான் உயிரிழந்தார். அரி ஓம் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்து குறித்து, அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.