ஊத்துக்கோட்டை:சுருட்டப்பள்ளி சர்வ மங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், வரும் 18ம் தேதி சிவராத்திரி விழாவை ஒட்டி, நான்கு கால யாக பூஜை மற்றும் ரிஷப வாகனத்தில் உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில், அன்னை பார்வதிதேவி மடியில் தலை வைத்து உறங்கும் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அனைத்து கோவில்களிலும் லிங்க ரூபத்தில் காட்சியளிக்கும் சிவபெருமான், இங்கு உருவ ரூபத்தில் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, தட்சணாமூர்த்தி, தம்பதி சமேதராய் காட்சியளிப்பது மற்றொரு சிறப்பு.
இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில், மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி விழா பிரசித்தி பெற்றது. இவ்விழா நாளை, துவங்குகிறது.
முதல் நாள், காலை 7:00 மணிக்கு கிராம தேவதைக்கு சிறப்பு பூஜை, விநாயகர் பூஜை ஆகியவற்றுடன் துவங்குகிறது.
ஒவ்வொரு நாளும், காலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை, மாலை 4:00 மணிக்கு சுவாமிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவின் முக்கிய நாளான, 18ம் தேதி, சிவராத்திரி தினத்தை ஒட்டி, மாலை 6:00 மணி முதல், மறுநாள் விடியற்காலை 4:00 மணி வரை நான்கு கால யாக பூஜை நடைபெற உள்ளது.
அன்றைய தினம், மாலை 4:00 மணிக்கு சனி மஹா பிரதோஷத்தை ஒட்டி, மூலவர் வால்மீகீஸ்வரர், நந்தியம்பெருமான் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மஹா தீபாராதனை காட்டப்படும்.
மறுநாள், 19ம் தேதி, மாலை 4:30 மணிக்கு, மரகதாம்பிகை தாயார் மற்றும் வால்மீகீஸ்வர சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.