சூலுார் : தனியார் பஸ் டிரைவர்களுக்கிடையே டைமிங் பிரச்னையால் ஏற்படும் சண்டையால் பயணிகள் அவதிக்குள்ளாவது வாடிக்கையாக உள்ளது.
கோவையில் இருந்து பல்லடம், திருப்பூர், காங்கயம், வெள்ளகோவிலுக்கு பல தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், பஸ்கள் இயக்குவதில் உள்ள டைமிங் பிரச்னையால் அடிக்கடி டிரைவர், கண்டக்டர்களிடையே தகராறு ஏற்படுகிறது. நடு ரோட்டில் பஸ்களை நிறுத்தி சண்டையிட்டு கொள்வது வாடிக்கையாகி உள்ளது.
இதனால், பள்ளி கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், அவசர நிமித்தமாக மருத்துவமனைக்கு செல்லும் பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். கடந்த, ஒரு வாரத்தில் மட்டும் நான்கு முறைக்கு மேல், தனியார் பஸ் ஊழியர்கள் தகராறு செய்து கொண்டனர்.
இதனால், நடு வழியில் பயணிகள் அவதிக்குள்ளாகினர். போலீசார் அங்கு சென்று டிரைவர்களை எச்சரித்து அனுப்பினர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில்,' தனியார் பஸ் ஊழியர்கள் அடிக்கடி சண்டையிட்டு கொள்வதால், நாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு உரிய நேரத்துக்கு செல்ல முடிவதில்லை.
பெண்கள், முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.