ஊட்டி : ஊட்டியில் புதுமை பெண் திட்டத்தில் இரண்டாம் கட்டத்தில், 165 மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கப்பட்டது.
மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா, 1,000 ரூபாய் உதவி தொகை, வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் புதுமை பெண் இரண்டாம் கட்ட உதவிதொகை வழங்கும் நிகழ்ச்சியை, கலெக்டர் அம்ரித் துவக்கி வைத்து பேசுகையில்,''புதுமை பெண் திட்டத்தின் கீழ், 'நீலகிரியில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில்நுட்ப கல்லுாரி, தொழிற்கல்வி பழகுனர் பயிலகம்,' என, அனைத்து வகையான உயர்கல்வி படிப்பினை உள்ளடக்கிய, 11 கல்லுாரியில் உயர் கல்வி பயிலும், 165 மாணவிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் தலா, 1,000 ரூபாய் செலுத்தப்பட்டு பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசு செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் தெரிந்து கொண்டு மாணவிகள் பயனடைய வேண்டும்,''என்றார்.
ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி டீன் மனோகரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.