மறைமலை நகர், மறைமலை நகர் என்.ஹெச்.,- 1 பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், 48. தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவர், நேற்று காலை, தன் தாய் திலகவதியுடன், 'ஸ்பிளண்டர்' பைக்கில், தாம்பரம் நோக்கி சென்றார்.
மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் எதிரே, திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலை, சந்திப்பில் சாலையை கடக்கும் போது, சென்னை நோக்கி சென்ற அருணாச்சல பிரதேச பதிவு எண் உடைய 'டூரிஸ்டர்' பேருந்து, பைக்கின் பின்புறம் மோதியது.
இதில், பேருந்தின் அடிப்பகுதியில் பைக் சிக்கியதில், சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அங்கிருந்தோர், படுகாயம் அடைந்த திலகவதியை மீட்டு, 108 அவசர கால ஆம்புலன்ஸ் மூலம், பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி விசாரிக்கின்றனர்.
நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் துவங்கியதில் இருந்து, இந்த சந்திப்பில், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த பகுதியில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடப்பதால், 'சிக்னல்' அமைக்க வேண்டும் என்பது, வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.