மதுரவாயல் கங்கையம்மன் கோவில் குளம், கண்டுக் கொள்ளப் படாததால் ஆகாயத் தாமரை செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது.
வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல் கங்கையம்மன் கோவில் தெருவில், கழிவு நீர் உந்து நிலையம் அமைந்துள்ளது.
மதுரவாயல், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முழுமையடையாததால், இந்த கழிவு நீர் உந்து மையத்திற்கு, கழிவு நீர் லாரிகள் அதிக அளவில் வருகின்றன.
கழிவு நீர் உந்து நிலையம் அருகே கங்கையம்மன் கோவில் குளம் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு கழிவு நீர் உந்து நிலையத்தில் இருந்து கழிவு நீர் வெளியேறி, குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதந்தன.
இதையடுத்து, குளத்தில் கழிவு நீர் வெளியேற்றுவது தடுக்கப்பட்டது. தற்போது, மீண்டும் குளத்தில் மீன்கள் விடப்பட்ட நிலையில், குளம் முழுதும் ஆகாயத் தாமரை படர்ந்து காட்சியளிக்கிறது.
இதனால், ஆகாயத் தாமரை இலையில் தேங்கும் தண்ணீர் கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. ஆகாயத்தாமரையால் குளத்து நீரிலுள்ள ஆக்சிஜன் குறைந்து, மீன்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படும்.
எனவே, கங்கையம்மன் கோவில் குளத்தில் உள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.