ராயப்பேட்டை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், 'மின் துாக்கி' பழுது மற்றும் போதிய குடிநீர் வசதி இல்லாததால், நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர், சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இங்கு, அறுவை சிகிச்சை கட்டட வளாகத்தில் இரத்த நாளம், குடல் இரைப்பை, சிறுநீரியல் உள்ளிட்ட, பல்வேறு அறுவை சிகிச்சை பிரிவுகள், ஐந்து தளங்களில் இயங்கி வருகின்றன.
இந்த வளாகத்தில், நோயாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில், இரண்டு 'மின் துாக்கி'கள் உள்ளன. இதில், ஒரு மின் துாக்கி மட்டும் பயன்பாட்டில் உள்ள நிலையில், மற்றொரு மின் துாக்கி, பல நாட்களாக பழுதாகி கிடக்கிறது.
அதேபோல, மருத்துவமனையில், போதிய குடிநீர் வசதி இல்லை. இங்கு குடிநீருக்காக வைக்கப்பட்ட குழாயும் பழுதாகி, பூட்டப்பட்டு கிடக்கிறது.
இந்த பிரச்னைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:
இந்த 'லிப்ட்' பிரச்னையால், நோயாளிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி, மருத்துவ பணியாளர்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இங்கு, குடிநீர் வசதிக்காக வைக்கப்பட்ட குழாய் பழுதாகி பூட்டப்பட்டு, பல மாதங்கள் ஆகின்றன.
ஆனால், இதுவரை போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.