சூணாம்பேடு:சூணாம்பேடு அருகே உள்ள தழுதாளிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன், 26.
இவர், நேற்று முன்தினம் இரவு, மகேந்திரா பொலிரோ வாகனத்தில், 200 லிட்டர் அளவு கொண்ட 13 பேரல்களில், 1,700 லிட்டர் அளவில், மீனவர்களுக்கு அரசு மானிய விலையில் வழங்கப்படும் டீசலை, சட்டத்திற்கு புறம்பாக ஏற்றிக்கொண்டு, பாண்டிச் சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்றார்.
கொளத்துார் சோதனை சாவடியில், சூணாம்பேடு போலீசார் இரவு சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, டீசல் ஏற்றி வந்த வாகனத்தை மடக்கி சோதனையிட்டதில், மானிய விலையில் வழங்கப்பட்ட டீசலை, சட்டத்திற்கு புறம்பாக சுய லாபத்திற்காக கடத்தியது தெரிய வந்தது.
இதுகுறித்து, சூணாம்பேடு போலீசார், தாமோதரன் மற்றும் அவரது நண்பர் பிரதீப், 22, ஆகியோரிடம், இதுகுறித்து விசாரணை செய்து கொண்டிருந்தபோது, தாமோதரன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
சூணாம்பேடு போலீசார் வழக்குப் பதிந்து, பிரதீப்பை கைது செய்து, தப்பி ஓடிய தாமோதரனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.