அசோக் நகர், கோடம்பாக்கம் மண்டலம் 135வது வார்டு அசோக் நகரில் புதுார் பகுதி உள்ளது. இங்குள்ள 14 தெருக்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, வீட்டில் உள்ள கழிப்பறை வழியாக கழிவு நீர் வீட்டிற்குள் புகுந்து விடுவது, பல ஆண்டுகளாக தொடர்கதையாக இருந்தது.
இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடால், அப்பகுதி மக்கள் பலர் தொற்று நோய் உள்ளிட்டவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த பிரச்னைக்கு, பல ஆண்டுகளுக்கு முன், அப்போதையை மக்கள் தொகைக்கு ஏற்ப, அசோக் நகர் 6வது அவென்யூவில் அமைக்கப்பட்ட கழிவு நீர் உந்து நிலையத்தின் திறன், மக்கள் தொகை அதிகரிப்பால் குறைந்தது தான் காரணம்.
இதையடுத்து, கழிவு நீர் உந்து நிலையத்தின் திறனை அதிகரிக்க, 31.53 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, கழிவு நீர் உந்து நிலையத்தின் திறனை அதிகரிக்க, கூடுதலாக கழிவு நீர் தொட்டி கட்டும் பணிகள் நடக்கின்றன.
அதன்படி, அசோக் நகரில் 19.5 அடி விட்டம் மற்றும் 28.7 அடி ஆழமுள்ள உறிஞ்சும் கிணறு அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இப்பணிகளை மே மாதத்தில் முடிக்க குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதனால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் புதுார் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என, நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.