பல்லடம் : பல்லடம் அடுத்த, கேத்தனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பல்வேறு கிராமங்களில் இருந்து, தினசரி அரசு பஸ் மூலம், மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
நேற்று முன்தினம், வாவிபாளையத்தில் இருந்து- கணபதிபாளையம் செல்லும் அரசு பஸ், அதிக கூட்ட நெரிசலுடன் வந்தது. வழக்கம்போல், கேத்தனுார் ஸ்டாப்பில் மாணவர்கள் ஏறினர்.
அதிக கூட்டம் இருந்ததை தொடர்ந்து, 15 மாணவியரை, அரசு பஸ் நடத்துனர், பாதி வழியில் இறக்கி விட்டுள்ளார். இதையடுத்து, மாணவியர், மூன்று கி.மீ., துாரம் நடந்தே வீட்டுக்கு வந்துள்ளனர்.
இது குறித்து மாணவியரிடம் விசாரித்த பெற்றோர், நேற்று காலை, அரசு பஸ்சை சிறை பிடித்தனர். பெற்றோர் கூறுகையில், 'பள்ளி செல்லும்மாணவ, மாணவியர் பத்திரமாக வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் வேலைக்கு செல்கிறோம்.
ஆனால், அரசு பஸ் நடத்துனர், பொறுப்பில்லாமல், பாதி வழியில் குழந்தைகளை இறக்கி விட்டுள்ளார். பாதுகாப்பின்றி குழந்தைகள் நடந்தே வந்துள்ளனர்'' என்றனர்.
அரசு பஸ் நடத்துனர், டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் சமாதானப்படுத்தினர். ''போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என உறுதி அளித்ததை தொடர்ந்து, அரசு பஸ்சை பொதுமக்கள் விடுவித்தனர். இதனால், பல்லடம் - - உடுமலை ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடுதல் பஸ் தேவை
இந்த வழித்தடத்தில், குறைந்த அளவு பஸ்களே இருப்பதால், மாணவ மாணவியர், பஸ்களில், ஆபத்தான நிலையில் தொங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு, காலை மற்றும் மாலை நேரங்களில், கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை தேவை.