கோவை : பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான 'சி ஜோன்' கிரிக்கெட் போட்டி, மலுமிச்சம்பட்டி, எஸ்.என்.எம்.வி., கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.
இதில் 21 கல்லுாரி அணிகள் பங்கேற்று நாக் அவுட் முறையில் போட்டியிட்டன.நேற்று காலை நடந்த முதல் அரையிறுதிப்போட்டியில், பொள்ளாச்சி என்.ஜி.எம்., மற்றும் எஸ்.டி.சி., அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற என்.ஜி.எம்., அணி, முதலில் பேட்டிங் செய்து, 21.2 ஓவர்களில் 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எஸ்.டி.சி., அணியின் தனுஷ் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற, 90 ரன்கள் தேவை என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய எஸ்.டி.சி., கல்லுாரி அணியினர், 16.3 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 90 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.
மதியம் நடந்த இரண்டாவது அரையிறுதிப்போட்டியில், வி.எல்.பி., மற்றும் கிருஷ்ணா கலை அறிவியல் அணிகள் போட்டியிட்டன.
இப்போட்டியில் டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்த வி.எல்.பி., அணி, ராகுல் (99*) மற்றும் முகமது ராபி (38*) ஆகியோர் உதவியால், 25 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழந்து, 170 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய கிருஷ்ணா அணியின் துவக்க வீரர்கள், ராஜகணபதி (59), கிருஷ்ணமூர்த்தி (43) ஜோடி, 114 ரன்கள் சேர்த்திருந்த போது, ராஜகணபதி வெளியேறினார்.
தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், கிருஷ்ணா கல்லுாரி அணி, 25 ஓவர்களில் ஏழு விக்கெட் இழந்து, 140 ரன்கள் எடுத்தது. வி.எல்.பி., அணியின் ராகுல் நான்கு விக்கெட் சாய்த்தார்.