உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் பிர்காவில், ஏராளமான தனியார் கல் குவாரிகள் மற்றும் கல் அரவை தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
இத்தொழிற்சாலைகளில் இருந்து, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு லோடு ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், அருங்குன்றம் மற்றும் பழவேரி கிராம சாலைகள் வழியாக பல பகுதிகளுக்கு இயங்குகிறது.
இதனால், இந்த சாலை எப்போதும் குண்டும், குழியுமாகவே உள்ளது. குறிப்பாக அருங்குன்றத்தில் இருந்து, பழவேரிக்கு பிரிந்து செல்லும் சாலை பகுதி, பழவேரி கல் அரவை தொழிற்சாலை எதிரே உள்ள சாலையில், ஆங்காங்கே மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு, குளம் போன்று காட்சி அளிக்கிறது.
இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாகி காயம் அடைகின்றனர்.
மண் புழுதி பறக்காமல் இருக்க சாலையில் தண்ணீர் ஊற்றுவதால், பழுதடைந்த பள்ளங்கள், சகதியுமாகி அச்சாலையில் வாகனங்கள் இயக்க முடியாமல், அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே, இப்பகுதியில், அருங்குன்றம் பகுதியில் சிமென்ட் கான்கிரீட் சாலையும், அருங்குன்றம்- பழவேரி 1 கி.மீ., துாரம் கொண்ட சாலையை, தரமான தார்ச் சாலையாக சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.