பல்லடம் : விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன், 52; லாரி டிரைவர். இரண்டு நாட்களுக்கு முன், பரமத்தி வேலூரில் இருந்து திருப்பூருக்கு லோடு ஏற்றி வந்தார்.
பணிகள் முடிந்து, பல்லடம் உடுமலை ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்தி வைத்திருந்தார்.
நேற்று காலை, லாரியை எடுக்க முயன்ற போது, லாரியின் பின்பக்கத்தில் இருந்து கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில், லாரி தீப்பற்றி எரிய துவங்கியது.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன், ஜெயகிருஷ்ணன் தீயை அணைக்க முயன்றார். தீயணைப்புத் துறையினர் உடனடியாக அங்கு வந்தனர்.
சிறிது நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த விபத்தில், லாரியின் பின் பகுதி சிறிது தீயில் கருகி சேதம் அடைந்தது.
லாரி, பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தீ பரவுவதற்குள் அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.