வேளச்சேரி தங்கையை தாக்கிய அண்ணனிடம் விசாரிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளரை, கத்தியால் குத்திய சம்பவம், வேளச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஷாலினி, 35. இவர், வீரமணி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
கணவர் வீரமணியை ஜாதியை சொல்லி திட்டியதாகவும், வீட்டில் இருந்த நகையை எடுத்துச் சென்றதாகவும் தன் சகோதரர் சதீஷ், 38, மீது வேளச்சேரி போலீசில் ஷாலினி புகார் அளித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், சகோதரி வேளாங்கண்ணி, தாய் சாந்தி ஆகியோர், நேற்று முன்தினம் மாலை, வீட்டுக்குள் புகுந்து ஷாலினியை தாக்கி உள்ளனர்.
இது குறித்து விசாரிக்க, வேளச்சேரி காவல் உதவி ஆய்வாளர் அருண், 36, சென்றார். சதீஷை, காவல் நிலையம் அழைத்துவந்து விசாரிக்க முயன்றார். அப்போது, கத்தியால் அருணின் தோள்பட்டையில் குத்திவிட்டு சதீஷ் தப்பி ஓட முயன்றார்.
பின், பொதுமக்கள் சதீஷை பிடித்து நைய புடைந்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார், அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
தலைமறைவான வேளாங்கண்ணி, சாந்தி ஆகியோரை தேடுகின்றனர். அருண், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.