கோவை : கோவை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும், வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள், நகர் பகுதிக்குள் வந்து செல்வதை தவிர்க்கும் வகையிலும், மேற்குப்புறவழிச்சாலை மற்றும் கிழக்கு புறவழிச்சாலை திட்டங்கள், 2010ல் அப்போதைய தி.மு.க., அரசால் அறிவிக்கப்பட்டது; அப்போது நிதி ஒதுக்கி, பணி துவக்கப்படவில்லை.
அ.தி.மு.க., ஆட்சியில் பூர்வாங்க பணிகள், நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்தன. தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் வேகமெடுத்தது.
முதல்கட்டமாக, மைல்கல் முதல் சிறுவாணி ரோடு மாதம்பட்டி வரை, 11.8 கி.மீ., துாரத்துக்கு ரோடு போடுவதற்கு, தமிழக பட்ஜெட் கூட்டத்தில், ரூ.210 கோடி ஒதுக்கப்பட்டது. பின், 250 கோடி ரூபாய் அனுமதி அளித்து, அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது, 'டெண்டர்' கோர, மார்ச், 16ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது; மறுநாள் (மார்ச் 17) டெண்டர் பிரிக்கப்பட்டு, ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்யப்படும்.
முதல் பேக்கேஜில் ரோடு போடும் பணி முழுமையாக முடிய, இரு ஆண்டுகளாகி விடும் என்பதால், இரண்டாவது பேக்கேஜ்க்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் துவக்கி விட்டனர்.
இரண்டாவது 'பேக்கேஜ்'ல், இதுவரை இரு கிராமங்களில் மட்டும் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது; மீதமுள்ள கிராமங்களில் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இப்பணியை வேகப்படுத்தி, முதல் 'பேக்கேஜ்' வேலை நடந்து வரும்போதே, இரண்டாவது 'பேக்கேஜ்'க்கும் நிதி ஒதுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் முதல் 'பேக்கேஜ்' பணிக்கு டெண்டர் கோரப்பட்டிருக்கிறது. 26 முதல், 30 மீட்டர் அகலத்துக்கு ரோடு அமையும்; மையத்தடுப்பு மட்டும், 4 மீட்டர் அகலத்துக்கு அமைக்கப்படும். இரு இடங்களில், சுரங்கப்பாதையுடன் கூடிய பாலம் கட்ட வேண்டும். முதல் 'பேக்கேஜ்' பணி முடிய, இரு ஆண்டுகளாகி விடும். 'மெட்ரோ' ரயில் இயக்குவதற்கு ஏற்ப, வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது.
- கண்ணன், கண்காணிப்பு பொறியாளர், மாநில நெடுஞ்சாலைத்துறை.
மேற்குப்புறவழிச்சாலை திட்டத்துக்கு, பாலக்காடு ரோட்டில் மைல்கல் அருகே துவங்கி, மேட்டுப்பாளையம் ரோட்டில் கூடலுார் அருகே நரசிம்மநாயக்கன்பாளையத்தில் முடியும் வகையில், 32.43 கி.மீ., துாரத்துக்கு ரோடு போட திட்டமிடப்பட்டது. இதற்கு, 15 வருவாய் கிராமங்களில், அரசு நிலம், 57 ஏக்கர் உட்பட, 361 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும். இப்பணி, மூன்று 'பேக்கேஜ்'களாக பிரிக்கப்பட்டது. முதல் 'பேக்கேஜ்' மைல்கல் பகுதியில் துவங்கி சுண்டக்காமுத்துார், தீத்திப்பாளையம், பேரூர், பேரூர்செட்டிபாளையம், மாதம்பட்டி வரை அமையும்.இரண்டாவது 'பேக்கேஜ்', சித்திரைச்சாவடியில் துவங்கி, கலிக்கநாயக்கன்பாளையம், வடவள்ளி, சோமையம்பாளையம் வழியாக பன்னிமடை வரை; மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட பணி நஞ்சுண்டாபுரத்தில் துவங்கி, கூடலுார், கூ.கவுண்டம்பாளையம் வழியாக நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கொள்ளப்படும்.