தொண்டாமுத்தூர் : கீழ்சித்திரைச்சாவடி வாய்க்காலில், கோழிக்கழிவுகள் கொட்டுவதை அதிகாரிகள் தடுக்காததால், வாய்க்கால் நீரில் புழுக்கள் உற்பத்தியாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோவையின் முக்கிய நீராதாரமாக நொய்யல் ஆறு உள்ளது. இந்த நொய்யலாறு, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உருவாகி, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக கரூரில் காவிரியுடன் கலக்கிறது.
இதன் முதல் தடுப்பணையாக, சித்திரைச்சாவடி தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து, மேல்சித்திரைச்சாவடி, கீழ்சித்திரைச்சாவடி வாய்க்கால் உருவாகி, கோவையில் உள்ள குளங்களுக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், நொய்யலாற்றின் துவக்கம் முதல் பல்வேறு இடங்களில், சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீர் நேரடியாக ஆற்றிலும், வாய்க்காலிலும் கலந்து வருகிறது.
மாதம்பட்டி -- தொண்டாமுத்தூர் சாலையோரத்தில் உள்ள, கீழ்சித்திரைச்சாவடி வாய்க்காலில், தொண்டாமுத்தூர் மற்றும் குளத்துப்பாளையத்தில் உள்ள, இறைச்சிக்கடைகளில் இருந்து கோழி மற்றும் ஆடு இறைச்சி கழிவுகள், மூட்டை, மூட்டையாக கொட்டப்படுகின்றன.
தற்போது, மழை இல்லாததால், வாய்க்காலில் நீர் குறைந்து காணப்படுகிறது. தற்போதும், மூட்டை, மூட்டையாக இறைச்சிக்கழிவுகள் கொட்டி வருவதால், வாய்க்கால் நீரில் புழுக்கள் உற்பத்தியாகி வருகிறது.
இந்த நீர், வழியோரங்களில் உள்ள தோட்டங்களுக்கு பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இதனால், புழுக்கள் நிறைந்து வருவதால், பயிர்கள் பாதிப்படையும் நிலை உள்ளது.
மாதம்பட்டி -- தொண்டாமுத்தூர் சாலையில் துர்நாற்றம் வீசுவதோடு, சுதாகார கேடும் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், தொண்டாமுத்தூர் மற்றும் தாளியூர் பேரூராட்சி நிர்வாகங்களும், பொதுப்பணித்துறையினரும் கண்டுகொள்ளாமல் உள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.