அடையாறு, அடையாறு மண்டலக்குழு கூட்டம், மண்டல அதிகாரி திருமுருகன் முன்னிலையில், மண்டல தலைவர் துரைராஜ் தலைமையில், நேற்று நடந்தது.
இதில், 168, 170, 171, 173, 174, 176, 178, 180 ஆகிய கவுன்சிலர்கள், தங்கள் வார்டு பிரச்னைகள் குறித்து பேசினர்.
குறிப்பாக, 'அம்மா' உணவகம், குழந்தைகள் மையங்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
நீரோட்டம் குறைவான பகுதிகளில், குழாய்களை மாற்றி அமைக்க வேண்டும். மின் வாரியம் உள்ளிட்ட துறைகள், மாநகராட்சிக்கு உரிய கட்டணம் செலுத்தி சாலை துண்டிக்க வேண்டும் என்றனர்.
மேலும், தரமணி சாலையில், விபத்து உயிர் சேதத்தை தடுக்க, ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை வைத்து ஆறு மாதங்களாகிறது. ஒவ்வொரு கூட்டத்திற்கும் வெவ்வேறு அதிகாரிகளை அனுப்பி, நெடுஞ்சாலைத் துறை காலம் தாழ்த்துகிறது என்றனர்.
இதற்கு, அந்தந்த துறை அதிகாரிகள் பதில் அளித்தனர். பின், 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தி வந்தாலே சிறப்பு தான்!
தி.மு.க., கவுன்சிலர், வட்ட செயலர் முட்டுக்கட்டையால், மயான காரிய மண்டபம் பணி கிடப்பில் போட்டதாக, நம் நாளிதழில் நேற்று, செய்தி வெளியானது. இந்நாளிதழ் செய்தியை சுட்டிக்காட்டி, கவுன்சிலர் பாஸ்கரன் பேசினார். இதற்கு, மண்டலக்குழு தலைவர் துரைராஜ், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளி வந்தாலே, நாம் நன்றாக செயல்படுகிறோம் என அர்த்தம். காரிய மண்டபம் கட்டுமான பணியை விரைந்து துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.