கோவை : கோவை வனக்கோட்டத்தில், வனவிலங்குகளின் தாகம் தீர்க்க 13 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன.
கோவை வனக்கோட்டம், 670 சதுர கி.மீ.,பரப்பில் அமைந்துள்ளது. இங்கு யானை, சிறுத்தை, மான், கரடி, செந்நாய், காட்டுமாடு, புலி, காட்டுபன்றிகள், குள்ளநரி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள், பறவை இனங்கள் மற்றும் அரியவகை தாவரங்கள் உள்ளன.
கோடைகாலம் துவங்கவுள்ள நிலையில், வனத்தில் கடுமையான வறட்சி ஏற்படும். இந்த சூழலில், வனவிலங்குகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை எனில், அவை ஊருக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள்ளும் ஊடுருவும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே தடாகம், தாளியூர், வரப்பாளையம், தொண்டாமுத்துார் உள்ளிட்ட பகுதிகளில், காட்டு யானைகளால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
வனவிலங்குகளின் தண்ணீர் தேவைக்காக, வனத்தில் அமைந்துள்ள இயற்கையான ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளுடன், வனத்துறை சார்பில் செயற்கை தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்படுவது வழக்கம்.
கோவை வனக்கோட்டத்தில், 7 வனச்சரகங்களிலும், 94 தண்ணீர் தொட்டிகள் அமைந்துள்ளன. இந்நிலையில், 13 லட்சம் ரூபாய் செலவில் கூடுதலாக, 6 தொட்டிகள் கட்டப்படவுள்ளன.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பொதுவாக தண்ணீர் தொட்டிகள், ஆயிரம் லிட்டர் முதல் 3 ஆயிரம் லிட்டர் வரை, கொள்ளளவு கொண்டதாக அமைக்கப்படுகிறது. இதில், பெரும்பாலும் வாகனங்கள் வாயிலாக, தண்ணீர் கொண்டு சென்று நிரப்பும் வகையில்தான் உள்ளன.
ஒரு சில இடங்களில் பைப் லைன் வாயிலாகவும், சோலார் போர்வெல் வாயிலாகவும், தண்ணீர் நிரப்பும் வகையிலான தண்ணீர் தொட்டிகளும் உள்ளன.
இந்த தொட்டிகள், வாரம் ஒரு முறை வனப்பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றன. தற்போது, சிறுமுகை வனச்சரகத்தை தவிர, மற்ற 6 வனச்சரகங்களிலும், 13 லட்சம் ரூபாய் செலவில் புதிய தொட்டிகள் கட்டப்படவுள்ளன' என்றனர்.
Advertisement