கோவை: கன்னியாகுமரியில் நடந்த தேசிய அளவிலான தாங்டா போட்டியில், கோவை வீரர்கள் மூன்று பதக்கங்கள் வென்றனர்.
தேசிய அளவிலான, 28வது சப் -ஜூனியர், சீனியர் தாங்-டா சாம்பியன்ஷிப் போட்டிகள் பிப்.,1ம் தேதி முதல் 3ம் தேதி வரை கன்னியாகுமரியில் உள்ள சி.எஸ்.ஐ., அரங்கில் நடந்தது.இப்போட்டியில் டில்லி, மகாராஷ்டிரா, அசாம், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில் தமிழக அணி சார்பில், 25 பேர் பங்கேற்றனர். தமிழக அணியில், கோவை சேர்ந்த எட்டு மாணவர்கள் பங்கேற்று, ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்றனர்.
வெற்றி பெற்றவர்கள் விவரம்:
பெண்கள் சீனியர் பிரிவில் ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மாணவி மிருதுளா தங்கப்பதக்கம், சப் ஜுனியர் பிரிவில் சிசு வித்யாலயா பள்ளி மாணவி நேத்ரா வெள்ளிப்பதக்கம் மற்றும் ஆண்கள் சீனியர் பிரிவில் அருண் பாண்டியன் வெண்கலப்பதக்கம் வென்றனர்.
வெற்றி பெற்ற வீரர்களை பயிற்சியாளர்கள் சரண்ராஜ், ரஞ்சித்குமார், மற்றும் பெற்றோர் பாராட்டினர்.